If Anybody want to add or update temple details means please mail me at marthandamarea@gmail.com we will put it on this site.

Sunday, 15 February 2015

சிவாலய ஓட்டம் - குமரி

ம் நடக்கும் நடன இயக்கமாக பாரதம் இத்தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்தது.

சிவ வழிபாடு பல்வேறு வித வழிபாடுகளை கொண்டது. பன்மையில் ஒற்றுமை ஒற்றுமையில் பன்மை எனும் பாரத பன்பாட்டின் ஒரு சிறந்த வெளிப்பாடாக திகழ்கிறது சிவ வழிபாடு. அத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்று சிவாலய ஓட்டம். சிவனின் இரவான மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் இந்நிகழ்வில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர்.



ஏன் “கோபாலா கோவிந்தா”?

மகாபாரதத் தொடர்புடன் ஒரு தொன்மம் வழங்கப்படுகிறது. தருமரின் பட்டாபிஷேகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டதாம். ஆனால் அதனைக் கொண்டு வருவது எப்படி? புருஷாமிருகத்தின் எல்லைக்குள் அகப்படும் எவரையும் உண்ணும் அதிகாரம் அதற்கு உண்டு. அதன் எல்லைக்கு வெளியே அதைக் கொண்டு வந்தால் அது கொண்டு வந்தவரின் கட்டளைக்கு கட்டுப்படுமாம். தன் பலத்தில் கர்வம் கொண்ட பீமன் புருஷாமிருகத்தின் எல்லைக்குள் புகுந்து அதனால் துரத்தப்பட்டு அதனை அதன் எல்லைக்கு வெளியே கொண்டு வர ஒத்துக்கொண்டான். வழக்கம் போலவே மாயக்கண்ணன் அங்கு வந்து ஒரு உபாயமும் சொன்னான். “ஒருவேளை நீ தளர்வடைந்து அந்த புருஷாமிருகம் உன்னை பிடித்துவிடுமென்றால் இதோ இந்த பன்னிரெண்டு உத்திராட்சங்களில் ஒன்றை கீழே போடு அது சிவலிங்கமாகிவிடும். புருஷாமிருகம் உடனே அதனை அமர்ந்து வழிபட்டுவிட்டுதான் உன்னை தொடரும். அதற்குள் நீ ஓடி வந்து விட முடியும்….அத்துடன் தன்னை மறந்து தன் எல்லையைத் தாண்டி புருஷாமிருகம் வரவேண்டுமே…அந்த அளவு ஆவேசத்துடன் உன்னை தொடர வேண்டுமென்றால் ஒரு வழிதான்…அது ஒரு மூர்க்க சிவ பக்தன். நீ “கோபாலா கோவிந்தா” என்று சத்தமாக என்னை விளித்தால் போதும், அது சிவ எல்லைக்குள் பிறிதொரு பெயரை சொல்பவன் எவன் என ஆத்திரத்துடன் கிளம்பி உன்னை துரத்த ஆரம்பிக்கும் கவலையே வேண்டாம்.”

பீமனும் இதற்கு உடன் பட்டான்.

புருஷாமிருகத்தின் எல்லைக்குள் சென்றான். “கோபாலா கோவிந்தா” என உரக்க விளித்தான். சிவ பூஜையிலிருந்த புருஷாமிருகம் முழு ஆத்திரத்துடன் கிளம்பியது. பீமன் ஓடினான் ஓடினான் ஆனால் புருஷாமிருகம் தன்னை விட வேகமாக ஓடுவதை உணர்ந்தான். அவனை பிடிக்கும் நிலை வந்த போது கிருஷ்ணன் கொடுத்த உத்திராட்சங்களில் ஒன்றை கீழே போட்டான். அது சிவலிங்கமாகிவிட புருஷாமிருகம் அங்கேயே அமர்ந்து வழிபடலாயிற்று. பீமனுக்கு கொஞ்சம் ஆசுவாசம். ஓடினான்.

மீண்டும் “கோபாலா கோவிந்தா” மீண்டும் புருஷாமிருகம் ஆத்திரத்துடன் பாய மீண்டும் பீமன் ஓட மீண்டும் ஒரு உத்திராட்சம். இப்படியாக பன்னிரண்டாவது உத்திராட்சமும் விழுந்தது. இறுதியில் எல்லைக் கோட்டில் பீமன் தாண்டு காலை வைக்கவும் எல்லைக்கு உள்ளிருந்த ஒரு காலை புருஷாமிருகம் பிடிக்கவும் இந்த ஓட்டம் நின்றது.

புருஷாமிருகம் வெளியே வந்த தன்னை விட்டுவிட வேண்டுமென பீமனும் உள்ளே ஒரு காலிருப்பதால் அவன் தனக்குத்தான் சொந்தமென புருஷாமிருகமும் சொல்ல வழக்கு தருமரிடம் சென்றது. தம்பி என்றும் பாராமல் பீமன் உடலை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை புருஷாமிருகத்திடம் கொடுக்க சொன்னார் தருமர். தருமரின் இந்த நியாய உணர்வை பார்த்து பீமனை விட்டுவிட்டது புருஷாமிருகம். அதே நேரத்தில் பன்னிரண்டாவது உத்திராட்சம் விழுந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்கு காட்சி அளித்தார். சிவ-விஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் தன் எல்லையை விட்டு வந்து தருமர் பட்டாபிஷேகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது.

தனக்கென ஒரு எல்லை வரையறை செய்து அதற்குள் இறையை அடைக்கப்பார்க்கும் மூடபக்தியை சீண்டி இழுத்து அதனை அறத்தின் மகுடாபிஷேகத்துக்கு ஒரு கருவியாக்கும் கிருஷ்ண லீலை மகாசிவராத்திரியில் நிகழ்ந்தேறியதாக ஐதீகம். பல கோவில் தூண் சிற்பங்களில் பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.

இந்த தொன்மத்தைத்தான் மீண்டும் நடத்துகிறார்கள் “கோவிந்தன்மார்” என்றழைக்கப்படும் சிவாலய ஓட்டம் செய்யும் பக்தர்கள். காவி உடையணிந்து “கோவிந்தா கோபாலா” என கோஷமிட்டு வெறுங்காலுடன் பனை ஓலையுடன் ஓடும் இப்பக்தர்களால் அந்த பன்னிரெண்டு சிவாலயப் பிரதேசங்களும் காவியால் போர்த்தப்படும் சிவராத்திரியன்று. இன்று இரு சக்கர வாகனங்களிலும் வேன்களிலும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றாலும் வெறுங்காலுடன் ஓடும் பக்த இளைஞர்களுக்கு என்றைக்கும் குறைவில்லை.



சிவாலய ஓட்டம் தொடங்கும் திருத்தலம் முன்சிறை எனும் அழகிய கிராமத்தில் உள்ள கோவில். சீதையை இராவணன் முதலில் சிறை வைத்த இடம் இது என பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவத்தலத்தில் இராமர் வழிபட்டார் எனும் செவிவழிக் கதையும் உண்டு. திருமலைநாயக்கரை அவரது அன்னை கருவுற்றிருந்த போது இக்கோவிலில் வழிபாடு நடத்தினார் என சொல்லப்படுகிறது. இங்கு சிவ சன்னிதிக்கு இடப்புறமாக விஷ்ணு சன்னிதி உள்ளது. கோவில் தமிழக மலையாள கட்டிட அமைப்புகளுடன் அமைந்தது. பொதுவாக கேரள கட்டிட அமைப்பில் சில சீனத்தன்மைகளை காணலாம். (அல்லது சீன கட்டிடத்தின் சில கூறுகள் தென் மேற்கு பாரத கடற்கரையிலிருந்து சென்றவையோ?) சின்ன குன்றின் மீது எழிலுற அமைந்த இத்திருக்கோவிலில் ஒரு சிறு நீர்தேக்கமும் உள்ளது. சிவாலய ஓட்டம் ஆரம்பிக்கிறது.



அடுத்ததாக கோவிந்தன்மார் செல்லும் திருக்கோவில் திக்குறிச்சி. இக்கோவில் தாமிரபரணி என்னும் குமரிமாவட்ட நதி அருகே உள்ளது. இக்கோவில் தூண் சிற்பங்களில் சில இராமயணக் காட்சிகளைக் (குறிப்பாக சுந்தரகாண்ட காட்சிகளைக்) காணலாம். சரபையின் வாய் வழியாக சென்று அவள் காது வழியாக மீளும் அனுமன் சிற்பம் ஒரு அழகிய கற்பனை. இதனை சுசீந்திரம் தூண்சிற்பங்களிலும் காணலாம். வியாக்ரபாதர் எனும் புலிப்பாத முனிவரையும் காணலாம். புருஷாமிருகம் பீமனைத் துரத்தும் மிக அழகான சிற்பம் ஒன்றையும் கற்றூண்களொன்றில் காணலாம். பெண்கள் சிவநாமம் சொல்லி தீபத்தை தொடர்ந்து இன்று முழுவது சுற்றி வரும் ஒரு நிகழ்ச்சியையும் செய்வர். இக்கோவிலில் நந்தி இல்லை. நந்தி தாமிரபருணி நதி நீருக்குள் இருப்பதாக ஐதீகம்.



மூன்றாவது கோவில் திற்பரப்பு. இயற்கை அழகு நிறைந்த அருவியோடணைந்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இப்பழமையான கோவில். கேரள பாணியில் அமைக்கப்பட்ட இக்கோவிலில் சிவன் வீரபத்திர மகாதேவராக கோவில் கொண்டுள்ளார். கோவில் வெளிப்பிரகாரத்தில் பாம்பு தவளையை பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் தரையில் உள்ளது. இது ஒரு சுரங்கவாசலின் திறப்புக்குறியீடு. அவசர காலங்களில் அரசக்குடும்பம் அரண்மனை கோட்டை ஆகியவற்றிலிருந்து தப்பி வரும் சுரங்க பாதை திறக்கும் வாசல் இங்கிருப்பதற்கான குறியீடு. புனிதப் பயணியர் இளைப்பாற கட்டப்பட்ட கல் மண்டபம் இங்கு இயற்கை சூழலுக்கு மேலும் மெருகேற்றுகிறது.



சிவாலய ஓட்டத்தில் அடுத்ததாக நாம் காணும் சிவத்தலம். திருநந்திக்கரை. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கோபுரமும் கேரள பாணியில் அமைந்ததுதான். இக்கோவிலின் தென்புறம் மலைக்குகையில் குடைவரை சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இக்கோவில் கல்வெட்டுக்கள் சோழப் பேரரசு இக்கோவில் திருப்பணிகளுக்கு சேவை செய்ததை பறைசாற்றுகின்றன. தமிழகத்தின் தென் மூலையில் கானகங்களுக்கிடையே உள்ள இந்த கோவிலுக்கு சோழர்கள் திருப்பணி ஆற்றியுள்ளனர் என்றால் அவர்களின் சிவபக்தியை இன்றைய தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பொற்காலமாக சோழர் காலம் விளங்கியதற்கு இந்த சிவபக்தியும் திருக்கோவில் அர்ப்பணிப்பும்தான் காரணமாக விளங்கியதோ என்னவோ? அப்படியானால் இன்றைய தாழ்நிலைக்கு காரணம் சிவத்துரோகம்தானோ என மனதுக்குள் எழும் கேள்விகளை ஒதுக்கிவிட்டு கவனியுங்கள். இன்றைக்கு நீங்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தரானால் உங்களுக்கு நீர்மோறும் பானகமும் நெல்லிக்காய் ஊறுகாயும் எங்கும் கிடைக்கும். இதனை ஒரு திருச்சேவையாகவே மக்கள் செய்கின்றனர். எவரும் விதிக்கவில்லை. எந்த திட்டமிட்ட நிறுவனமும் இல்லை. சிவதாண்டவத்தில் தன்னிச்சையாக எழும் ஒரு நடன அசைவாகவே இந்த சேவைகள் எழுகின்றன. இக்கோவிலுக்கு நிரந்தர கொடிமரம் இல்லை. சிவராத்திரி அன்று மட்டுமே கோவிலுக்கு கொடிமரம் இங்கு அமைக்கப்படுவது தொன்றுதொட்ட வழக்கம்.



அடுத்த சிவாலய ஓட்ட திருக்கோவில் - பொன்மனை. இத்திருக்கோவில் சிவபிரானை கண்டெடுத்தவர் ஒரு வனவாசி. அவர் பெயர் தீம்பிலான். எனவே அவரது பெயரிலேயே இங்குள்ள குடி கொண்டுள்ள குலங்கள் ஏதுமற்று அனைத்து குலங்களுக்கும் சொந்தமான மகாதேவர் தீம்பிலான்குடி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். நாகலிங்க பூக்கள் வனப்புடன் பூத்துக்குலுங்க அமைந்திருக்கும் இத்திருக்கோவிலில் உட் பிரகார மண்டபக் கூரையில் மரத்தில் செதுக்கப்பட்டு காட்சியளிக்கும் அழகிய இராமாயணக் காட்சிகள் சைவ வைணவ ஒற்றுமையை மீண்டும் பறை சாற்றுகின்றன.



ஆறாவது கோவில் பன்னிப்பாகம். வயல்களும் குன்றுகளும் சூழ இயற்கையுடன் இணைந்து அழகாக எழும்புகிறது இக்கோவிலின் சிறு கோபுரம். இங்கு கோவில் கொண்டுள்ள சிவன் கிராதமூர்த்தியாக இருக்கிறார். அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்க சிவன் வேடனாக வந்து பன்றியைக் கொன்ற இடம் இதுவென்பது ஐதீகம். இன்று இங்கு ஒரு காய்கறிச்சந்தை உருவாகிவிட்டது. இன்றைக்கு மட்டும்தான். சிவராத்திரிக்கு மட்டுமே. இன்றைக்கு இந்த விளைபொருட்களை சிவனுக்கு படைப்பது இங்குள்ள வழக்கம். வழியெங்கும் ஓடும் கோவிந்தன்மாருக்கு வழங்கப்படும் மோரும் ஊறுகாயும்.



ஏழாவதாக கோவிந்தன்மார் வந்து சேரும் திருக்கோவில் கல்குளம் எனும் புராதன ஊரில் உள்ளது. 12 திருக்கோவில்களில் இந்த கோவிலில் மட்டும்தான் திராவிட கட்டிடக்கலை பாணி கோபுரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. இங்கு கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம் நீலகண்ட சுவாமி அம்மை ஆனந்தவல்லீ அம்மன் அழகிய கோவில் குளம் மேலும் அழகூட்டும் கல்மண்டபங்கள். பெரும் மரங்கள். மரத்தடி நாகர்கள். சிவராத்திரியன்று கோவில் குளத்தில் நீராடி ஈரம் சொட்ட சொட்ட பனையோலை விசிறியுடன் தெய்வ தரிசனம் செய்ய வரும் இளங்காளைகளாக கோவிந்தன்மார். எங்கும் கோபாலா கோவிந்தா எனும் கோஷம். பிரகாரங்களில் விளக்கு பூஜைகள் கோவிலின் வெளியில் குழந்தைகளும் பெரியவர்களும் சிவபக்தர்களுக்கு நீரும் மோரும் நெல்லி ஊறுகாயும் அளித்து செய்யும் சிவத்தொண்டு. விவசாய விளைபொருட்கள் இன்று சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. முன்னொரு காலத்தில் வேணாட்டு மன்னர்களின் தலைநகராக இருந்து இன்று பத்மநாபபுரம் எனும் பெயருடன் விளங்கும் கல்குளம் ஒரு பூலோக கைலாயமாக தோற்றமளிப்பதை காணுங்கள்.



இதோ எட்டாவது சிவாலயத்துக்கு வருகிறோம். இது குன்றும் வயல்களும் சூழ்ந்த மேலாங்கோடு எனும் அழகிய கிராமத்தில் உள்ளது இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக கோவில் கொண்டுள்ளார். அவரது திருநாமம் காலகாலர் என்பது. பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு எல்லையில் இத்திருக்கோவில் உள்ளது. இங்கு செல்லும் வழியில் உங்களை குழந்தைகள் கூவி கூவி அழைத்து தாங்கள் வைத்திருக்கும் மோரையும் நெல்லிக்கனியையும் அருந்த சொல்வார்கள். ஏனென்றால் சிவ பக்தர்களுக்கு செய்யப்படும் இந்த புண்ணிய கைங்கரியம் ஜென்ம ஜென்மமாக தலைமுறைகளுக்கு நன்மை சேர்க்கும் என அவர்கள் அறிவார்கள். “அவர் இவர்” எனாது எவரும் அங்கு இளைப்பாறலாம் தாகசாந்தி செய்யலாம். நீங்கள் இன்றைக்கு கோவிந்தன்மாராகக் கூட இருக்க வேண்டியதில்லை. வழிப்போக்கராக இருந்தாலும் இந்த சேவைகள் உங்களுக்கு அளிக்கப்படும். சிவாலயங்கள் செல்லும் எந்த வீதியிலும் நீங்கள் விருந்தாளியாகவே கருதப்படுவீர்கள். சிவபக்தர்களுக்கு நீரும் மோரும் அளிப்பதை குழந்தைகள் மிகப் பெரிய பாக்கியமாக கருதி போட்டிப் போட்டுக்கொண்டு செய்வதை நீங்கள் காணலாம். குமரி மாவட்ட சைவ உணவு வகைகளை ஆங்காங்கே மிகவும் பாரம்பரியமான விதங்களில் பொங்கி உங்களுக்கு பனை மடல்களில் அளிப்பார்கள். கஞ்சியும் சாத வகைகளும் துவையல்களும் ஊறுகாய்களும் உங்களை வரவேற்கும். சிவ பக்தியின் முன்னால் உடல்நினைவு சிறிதுமற்ற பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசுகளின் தொடக்கமாக இவை அமைகின்றன.



அடுத்த சிவாலயம் வில்லுக்குறி என இன்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த மகாதேவர் ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுற்றிலும் அழகிய வாய்க்கால்களும் கால்வாய்களும் வயல்வெளிகளும் நிறைந்த பிரதேசம். எளிமையான குடிசைகள். இன்று அவை சிவபக்தர்களுக்கு சேவை செய்யும் மையங்கள். எந்த வீட்டிலும் கோவிந்தன்மார் உணவுண்ணலாம். அவர்கள் வரவேற்கப்படுவார்கள். இந்த சிவபுரத்தில் சிவராத்திரியன்று எங்கெங்கும் கோலாகலம்தான். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகிய கோலங்கள் - வரவேற்பு சின்னங்களாக. உலகமயமாகி எங்கெங்கும் மக்டொனால்டும் கொக்ககோலாவும் உணவுப்பன்மையை அழிக்கும் இந்த காலகட்டத்தில் வட்டார உணவு பதார்த்தங்கள் தங்கள் பாரம்பரிய சுவையுடன் இங்கு சிவ பிரசாதமாக. ஏறக்குறைய இந்த சிறிய மாவட்டத்துக்குள்ளேயே இந்த சிவாலயங்களை இதே வரிசைக் கிரமத்தில் வழிபட்டு வந்தால் கோவிந்தன்மார்கள் தளர்ந்திருப்பார்கள். கால்கள் வலிக்க அவர்கள் ஓடுகிறார்கள். தளர்ந்தது உடல் ஆனால் மனமல்ல. அவர்கள் ஓடுவது காலத்தையே சம்ஹாரம் செய்யும், அண்ட சராச்சரங்களை தன் ஆடலால் தோற்றுவித்து ஊழியுள் தீர்த்து மீண்டும் உற்பவிக்கும் ஆடலரசனை இதயத்துள் தாங்கி. எனவே உடல் வலி அவர்களை என்ன செய்யும்? அவ்ர்கள் காலணி அணியவில்லை. சுட்டெரிக்கும் வெயில்தான். ஆனால் சுண்ணாம்புக்கணவாயையே பூம்பொய்கையாக்கும் ஈசன் எந்தையின் இணையடி நீழலிலல்லவா அவர்கள் ஓடுகின்றனர்! கோவிலின் வெளிப்பிரகாரம் ஒரு காலத்தில் முட்புதர்கள் மண்டி கிடந்தது. அவற்றை நீக்கும் உழவாரத் திருப்பணியை இங்குள்ள சிவபக்தர்களும் சேவாபாரதி அமைப்பினரும் செய்துள்ளனர்.



திருவிதாங்கோடு அடுத்த சிவாலயத் திருத்தலம். பொதுவாக இதிலிருந்து இரவு நேரமாகியிருக்கும். இத்திருக்கோவிலிலும் நாராயணருக்கு சன்னிதி உண்டு. இங்கு வெளிப்பிரகாரத்திலில் உள்ள விளக்குப் பாவையரின் சிற்பங்கள் சுற்று வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு பருவத்திலும் அதை விட முக்கியமாக சமுதாயத்தின் அனைத்து தளங்களிலிருந்துமாக இவ்விளக்குப் பாவையர் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் கஜசம்ஹார மூர்த்தியின் உக்கிரமான சிலை புருஷாமிருகத்தின் தீர்க்கமான சிலை ராமாயணக்காட்சிகள் என பல அழகிய தூண் சிற்பங்களைக் கொண்டது இந்த கோவில்.



அடுத்த கோவில் திருப்பன்றிக்கோடு. இங்கு மொகலாயப்படைகள் வேணாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அவ்வெற்றிக்கு ஈஸ்வரனும் குளவிகள் மூலம் உதவினார் என்பது ஐதீகம். இங்குள்ள சிவனின் பெயர் மகாதேவன். இங்குள்ள மிகப் பழமையான குளமும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மரங்களும் ஒரு மிக அமைதியான சூழலை உருவாக்குகின்றன. களைத்து வரும் கோவிந்தன்மாரை குளுமையான காற்று இங்கு அரவணைத்துக் கொள்கிறது.



இதோ இறுதி திருத்தலத்தை அடைந்து விட்டோ ம். கோவிந்தன்மாரின் கோஷங்கள் கேட்கின்றன.
"கோபாலா கோவிந்தா"
“யாரைக் காண”
"சாமியை காண"
“சாமியைக் கண்டால்”
“மோட்சம் கிட்டும்”
“எப்போ கிட்டும்”
“இப்போ கிட்டும்”

மோட்சம். விடுதலை. எங்கோ என்றோ இறப்புக்கு பின் அல்ல. இங்கே இப்போதே…

திருநட்டாலம்.

இங்குதான் புருஷாமிருகத்துக்கு சைவ-வைணவ பேதம் எனும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. சிவ-விஷ்ணு ஐக்கிய தரிசனத்தை அனுபவித்து சைவ-வைணவ பேதத்தை விட்டொழித்தது. பீமனுக்கு தன் தசை வலியின் மீதிருந்த கர்வத்திலிருந்து விடுதலை கிடைத்தது. தருமம் கொலுவேற்க மிருகமும் மனிதமும் இணைந்த நம்மில் இருக்கும் பேத வெறிகளை விட்டொழித்து இரண்டற்ற ஒன்றான உண்மையின் உள்ளொளியை பெறுவோம். அந்த உள்ளொளி பெறும் போதுதான் நம்முள் சுரக்கும் நன்மை தர்மத்தின் கைங்கரியத்துக்கு பயன்பட முடியும். ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் காவி போர்த்தி கால் வலிக்க ஓடும் கோவிந்தன்மார் சொல்லும் செய்தி நமக்கு இதுதான். கோவிந்தன்மாரை இயக்குவது அழிவற்ற தருமத்தின் சக்தி. ஸ்ரீ கிருஷ்ணனின் ஞானம். பேதமற்ற அந்த ஞானத்தை எல்லாம் வல்ல எல்லோருள்ளும் எல்லாவற்றுள்ளும் உறையும் சிவம் நமக்கு அருளட்டும்.

நன்றி -தமிழ்ஹிந்து


சிவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் துவங்கியது. சிவராத்திரி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமாக கொண்டாடப் பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவது இம்மாவட்டத்தில் சிவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகிய இடங்களில் 12 சிவாலயங்கள் உள்ளது. சிவனும், விஷ்ணுவும் ஒன்று, அகந்தை கூடாது என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....


No comments:

Post a Comment